ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Bernie Sanders declares willingness to “work with Trump”

பேர்ணி சாண்டர்ஸ் "ட்ரம்ப் உடன் இணைந்து செயல்படுவதற்கு" விருப்பத்தை அறிவிக்கிறார்

By Eric London
11 November 2016

செவ்வாயன்று இரவு டொனால்ட் ட்ரம்ப் இன் தேர்தல் வெற்றியை அடுத்து, ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் "உடன் இணைந்து செயல்படுவதற்கு" விருப்பத்தை பேர்னி சாண்டர்ஸ் அலுவலகம் அறிவித்தது.

"ஸ்தாபக பொருளாதாரம், ஸ்தாபக அரசியல் மற்றும் ஸ்தாபக ஊடகங்களால் நொடிந்து போய், சோர்வுற்றிருக்கும் ஒரு வீழ்ச்சியடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் கோபத்திலிருந்து வந்தவர்" ட்ரம்ப் என்று குறிப்பிட்டு, சாண்டர்ஸ் பின்வருமாறு கூறுமளவிற்கு சென்றார்:

“இந்நாட்டின் உழைக்கும் குடும்பங்களது வாழ்க்கையை மேம்படுத்தும் கொள்கைகளை பின்தொடர்வது குறித்து திரு. ட்ரம்ப் தீவிரமாக இருப்பதை பொறுத்த வரையில், நானும் ஏனைய முற்போக்காளர்களும் அவருடன் இணைந்து இயங்க தயாராக உள்ளோம். அவர் பின்பற்றும் இன, பாலியல், வெளிநாட்டவர் விரோத மற்றும் சுற்றுச்சூழல்-விரோத கொள்கைகளை பொறுத்த வரையில், நாங்கள் அவரை கடுமையாக எதிர்ப்போம்,” என்றார்.

CNN க்கு நேற்று அளித்த ஒரு நேர்காணலில், “இந்நாட்டின் நடுத்தர வர்க்க மற்றும் உழைக்கும் குடும்பங்களுக்காக உண்மையில் அவர் வேலை செய்யும் பிரச்சினைகளில் ஜனாதிபதி ட்ரம்ப் உடன் இணைந்து இயங்க" அவர் விரும்புவதைக் குறிப்பிட்டு சாண்டர்ஸ் இப்புள்ளியை மீண்டும் எடுத்துரைத்தார். பின்னர் அவர் கூறுகையில், “அவர் சீனாவில் அல்லாமல், அமெரிக்காவில் வேலைகளை உருவாக்குவது குறித்து தீவிரமாக இருந்தால், நான் அவருடன் இணைந்து இயங்குவேன்,” என்றார், “பில்லியனர்களும் பன்னாட்டு பெருநிறுவனங்களும் அவர்கள் செலுத்த வேண்டிய நியாயமான வரியை செலுத்த கோரும் ஒரு வரிமுறையை உருவாக்குவதில் அவர் முற்போக்குவாதிகளுடன் வேலை செய்வாரென நான் பெரிதும் நம்புகிறேன்,” என்றார்.

ஒருவர் சாண்டர்ஸ் இன் விடையிறுப்பை, Attila the Hun அவரது பெரும் நாடோடி கூட்டத்துடன் ஐரோப்பாவிற்குள் ஊடுருவிய போது கூறிய வார்த்தைகளைக் கொண்டு நினைவுகூர வேண்டும்: “நீங்கள் மக்களுக்கு உதவும் வரையில் நான் உங்களுடன் இணைந்து இயங்குவேன், ஆனால் நீங்கள் கற்பழிப்பு மற்றும் சூறையாடல்களில் ஈடுபடும் போது உங்களை நான் எதிர்ப்பேன்!” என்றார்.

“உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த" ட்ரம்ப் எதையாவது செய்வார் என்ற கருத்து ஒரு கற்பனையாகும். அவர் செல்வந்தர்களுக்கு வரிகளை நீக்குவதற்கும், பெருநிறுவன நெறிமுறைகளை நீக்குவதற்கும், சமூக திட்டங்களை வெட்டுவதற்கும் மற்றும் ஏனைய பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கும் பொறுப்பேற்றுள்ள ஒரு வலதுசாரி பில்லியனர் ஆவார். வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் குறித்த வோல் ஸ்ட்ரீட் இன் மதிப்புரை, சாதனை அளவிலான சந்தை உயர்வுகளுடன் வியாழனன்று வழங்கப்பட்டது.

பாசிசவாத ட்ரம்ப் உடன் கூடி உழைப்பதற்கான இந்தவொரு முன்மொழிவு தான், "பில்லியனிய வர்க்கத்திற்கு" எதிரான சாண்டர்ஸ் இன் "அரசியல் புரட்சியினது" விளைபொருள். சாண்டர்ஸ் அவரே வேட்பாளராக போட்டியிடுவதென்று அறிவித்து பதினெட்டு மாதங்களுக்குப் பின்னர், ட்ரம்ப் குறித்த அவரது இந்த அறிக்கை, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு முக்கிய அனுபவத்தை வலியுறுத்துகிறது.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தன்னைத்தானே சோசலிசவாதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு 23 மாநிலங்களில் 13 மில்லியன் வாக்குகளை வென்றார். அவர் வெறும் அரைவாசி பிரதிநிதிகளையே வென்றார் என்றபோதினும், “வரலாற்றிலேயே மிகவும் முற்போக்கான கட்சி நடைமுறையை" இம்மாநாடு நடத்தி உள்ளது என்று பொய்யாக அறிவித்து, கிளிண்டன் வேட்பாளராவதற்கு பிலடெல்பியாவில் சாண்டர்ஸ் விட்டுக்கொடுத்தார்.

யதார்த்தத்தில், ஓர் அரசியல் விலை மதிப்பு இல்லாமலேயே அவர் சரணடைவு வந்தது —தனது பொது தேர்தல் பிரச்சாரத்தின் போது சமூக சமத்துவமின்மை பிரச்சினையை நிராகரித்திருந்த, மிகவும் வலதுசாரி தேர்தல் பிரச்சாரத்தை நடத்திய மற்றும் நடப்பில் இருப்பதற்கு ஒரு எதிர்ப்பாளராக தன்னைத்தானே ட்ரம்ப் காட்டிக்கொள்வதற்கான அவரது தகைமையை உறுதிப்படுத்திய கிளிண்டனிடம் இருந்து அவர் எந்த விட்டுக்கொடுப்பையும் வென்றிருக்கவில்லை.

அம்மாநாட்டை தொடர்ந்து வந்த பல வாரங்கள் மற்றும் மாதங்களில், சாண்டர்ஸ் மூன்றாம்-கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க இருந்த அவரது முன்னாள் ஆதரவாளர்களைக் கடுமையாக கண்டித்து, அவர் யாரை முன்னர் வோல் ஸ்ட்ரீட் வேட்பாளர் என்று கண்டனம் செய்தாரோ அவரையே, அதாவது கிளிண்டனையே ஆதரிக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் அவர் பயணம் செய்தார்.

ட்ரம்ப் சம்பந்தமாக சாண்டர்ஸ் இன் தற்போதைய திடீர் நிலைமாற்றமும், கிளிண்டன் சம்பந்தமாக அவரது முந்தைய முன்னெடுப்பு எந்தளவிற்கு உடனடியாக மாறியதோ அதேயளவிற்கு உடனடியாக மாறியுள்ளது. சாண்டர்ஸ் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரையில், கிளிண்டனுக்கு வாக்களிப்பது அவசியம் ஏனென்றால் "டொனால்ட் ட்ரம்ப் இந்நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு பேரழிவாக இருப்பார்" என்று வலியுறுத்தி வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை அதற்கு முன்னரே, அவர் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் மீது ட்ரம்ப் அவரது பேரழிவுகரமான கொள்கைகளைத் திணிப்பதற்கு உதவ வந்துவிட்டார்.

சாண்டர்ஸ் இன் உறுதிமொழி ஒரு அரசியல் பிழையோ அல்லது தவறான கணக்கீட்டின் விளைபொருளோ கிடையாது. அதற்கு மாறாக அது அவரது பிரச்சாரத்தின் முதலாளித்துவ-சார்பு குணாம்சத்தையும், தொழிலாள வர்க்க விரோத குணாம்சத்தையும் மற்றும் அவரது ஒட்டுமொத்த அரசியல் தொழில் வாழ்வின் குணாம்சத்தையும் அம்பலப்படுத்துகிறது.

சாண்டர்ஸ் அவரது இரண்டு பத்தி சூளுரையில், ஏனையவற்றோடு சேர்ந்து "கண்ணியமான சம்பளம் வழங்கும் வேலைகள் சீனாவிற்கு செல்வதைக் கண்டு" சோர்ந்து போன, "வீழ்ச்சியடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் கோபத்தை ட்ரம்ப் பெற்றிருப்பதாக" அந்த செனட்டர் விமர்சனபூர்வமின்றி குறிப்பிடுகிறார். சாண்டர்ஸ் இன் இராஜாங்க மொழி அவரது முன்மொழிவுகளுக்கும் மற்றும் ட்ரம்ப் இன் முன்மொழிவுகளுக்கும் இடையிலான சமாந்தரங்களை அம்பலப்படுத்துகிறது.

ட்ரம்ப் மற்றும் சாண்டர்ஸ் இருவருமே, "நமது வேலைகளை திருடுகிறார்கள்" என்று சீனா மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிராக அணிவகுத்துள்ள தேசியவாதிகளாவர். இருவருமே அமெரிக்க தொழிலாளர்களை புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நிறுத்துகின்றனர் மற்றும் கூலிகளை குறைக்க இட்டுச் செல்வதற்காக பிந்தையவர்களைக் குறைகூறுகின்றனர். இருவருமே வாழ்க்கை தரங்களை எதிர்க்கும் விதத்தில் பேசுகின்றனர், ஆனால் இருவருமே முதலாளித்துவ அமைப்புமுறை அல்லது அமெரிக்க போர் எந்திரத்திற்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. இந்த அடிப்படையில், "உழைக்கும் குடும்பங்களின் வாழ்க்கைகளை மேம்படுத்தும் கொள்கைகளை பின்தொடர்வதில்" ட்ரம்ப் "தீவிரமாக" இருப்பார் என்பதில் சாண்டர்ஸ் நம்பிக்கை வைக்கிறார்.

இன மற்றும் சுற்றுச்சூழல் அரசியல் என்ற மிகவும் குறுகிய அடிப்படையில்தான், ட்ரம்ப் ஐ எதிர்க்க சாண்டர்ஸ் தயாராக உள்ளார்: ட்ரம்ப் "இன, பாலியல், வெளிநாட்டவர் விரோத மற்றும் சுற்றுச்சூழல்-விரோத கொள்கைகளைப் பின்பற்றினால், நாங்கள் அவரைக் கடுமையாக எதிர்ப்போம்,” என்கிறார்.

ஆனால் பொருளாதார பிரச்சினைகளில் ட்ரம்ப் க்கான அவரது ஆதரவை உறுதிப்படுத்துவதன் மூலமாக, கருக்கலைப்பு மற்றும் ஒரே-பாலின திருமணம் போன்ற பிரச்சினைகள் சம்பந்தமான ஜனநாயக உரிமைகள் மீதான மிகவும் அடிப்படை கேள்விகளில் அடிபணிவதற்கு சாண்டர்ஸ் பாதை வகுத்துக் கொள்கிறார். சந்தர்ப்பத்திற்கேற்ற அரசியல் கட்டளையிடும் விதத்தில். அரசியல் வேளைக்கேற்றவாறு அவ்வாறு ஆணையிடுமானால், இப்பிரச்சினைகளை மங்கச்செய்வதற்கு திரும்பும் ஜனநாயகக் கட்சி மீது, இந்த ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை நம்பி விடமுடியாது என்பதற்கு, ட்ரம்ப்பின் தேர்வே ஒரு சான்று ஆகும்.

சாண்டர்ஸ் பரிதாபகரமாக ட்ரம்பிடம் மண்டியிடுவது அமெரிக்க ஜனநாயகத்தின் வெட்கக்கேடான குணாம்சத்தைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை, ஜனாதிபதி தேர்தலானது தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் மற்றும் சமூக எதிர்ப்பை பல பெருநிறுவன-சார்பு வேட்பாளர்களில் ஒருவருக்குப் பின்னால் திசைதிருப்பும் நோக்கம் கொண்ட பொய்கள் மற்றும் திசைதிருப்பல்களின் பதினெட்டு மாத காலம் நீண்ட தொகுப்பாக இருந்தது.

ஊடகங்கள் மற்றும் நிதிய ஜாம்பவான்களின் ஒரு சதிக்கூட்டம், பொய்கள் மற்றும் பொய் வாக்குறுதிகளுடன் பொதுமக்களின் எண்ணங்களைக் குழப்ப பில்லியன் கணக்கான டாலர்களை விரயமாக்கியது. அமெரிக்காவின் சமூக யதார்த்தம் குறித்து ஒன்றுமே அறியாத செல்வாக்கான பண்டிதர்களை நியமித்த வலையமைப்புகளால், தொலைக்காட்சி பார்வையாளர்கள் அர்த்தமற்ற தேர்தல் செய்திகளின் ஒரு முடிவில்லா சுழற்சிக்குள் தள்ளப்பட்டார்கள். ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி பிரச்சாரங்களுக்கு அப்பாற்பட்டிருந்த எந்தவொரு அரசியல் கண்ணோட்டங்களும் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டன. இந்த தரந்தாழ்ந்த காட்சிப்படுத்தலின் சாம்பலில் இருந்து தான் டொனால்ட் ட்ரம்ப் உருவானார் என்றால் முற்றிலும் பொருத்தமாகவே இருக்கும்.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், தொழிலாளர்களும் இளைஞர்களும் ஜனநாயக கட்சியைப் பின்தொடர வேண்டுமென்றும் மற்றும் விசுவாசமான சிறுபான்மையினர் மூலமாக புதிய நிர்வாகத்தை எதிர்க்க வேண்டுமென்றும் அவர்களுக்கு சாண்டர்ஸூம் மற்றும் ஜனநாயகக் கட்சியும் மீண்டுமொருமுறை வேண்டுகோள் விடுக்கலாம். மைக்கேல் மூர் போன்ற அரசியல் முட்டாள்களின் ஆதரவோடு, சாண்டர்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் செனட்டர் எலிசபெத் வாரென் போன்ற பிரபலங்கள் தலைமையிலான ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் பிரிவுகள், ஜனநாயகக் கட்சி "மாற்றப்பட்டு" வருகிறது மற்றும் "இடதுக்கு அழுத்தமளிக்கலாம்" என்று கூட அறிவிக்கலாம்.

பொய்கள், பொய்கள், நிறைய பொய்கள். அமெரிக்க அரசியல் அமைப்புமுறை தொழிலாள வர்க்கத்தை வாய்மூடி இருக்கவும் மற்றும் அதன் முதலாளித்துவ சுரண்டுவோரது கட்சிகளோடு அவர்களைக் கட்டி வைக்கவும் செய்யப்பட்டுள்ளது என்பதையே கடந்த 18 மாதங்களின் தரங்குறைந்த சீரழிவு நிரூபிக்கிறது.